PUBLISHED ON : செப் 05, 2026 01:01 AM

'ஓட ஓட விரட்டினால், எப்படி தான் அரசியல் செய்வது...?' என புலம்புகிறார், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி.
மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., தோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்ததுமே, மாநில அரசியலில் அதிரடியான மாற்றங்கள் அரங்கேற துவங்கின.
திரிணமுல் காங்.,கின் பெரும்பாலான எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், அந்த கட்சியில் இருந்து பிரிந்து, தனித்து செயல்பட துவங்கி விட்டனர். மேலும் சிலர், வேறு கட்சிகளுக்கு தாவினர்.
இதற்கிடையில், தன் அரசியல் வாரிசாக, தன் மருமகன் அபிஷேக் பானர்ஜியை மம்தா பானர்ஜி உருவாக்கி வருகிறார். ஆனால், அபிஷேக் பானர்ஜிக்கு, அடுத்தடுத்து சோதனைகள் அணிவகுத்து வருகின்றன.
இரண்டு மாதங்களுக்கு முன், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அபிஷேக்கை, சில மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி, அழுகிய முட்டைகளை அவர் மீது வீசினர். சமீபத்தில், கொல்கட்டாவில் உள்ள அபிஷேக்கின் அலுவலகத்தை , ஒரு கும்பல் சூறையாடியது.
'என்னை வீட்டுக்குள்ளேயே முடக்கி போடுவதற்கு பா.ஜ., செய்யும் சதி திட்டம் தான், இந்த தாக்குதல்கள்...' என கொந்தளிக்கிறார், அபிஷேக்.
