PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

'அடுத்தடுத்து அதிரடியாக எதையாவது செய்து அசத்துகிறாரே...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
மம்தா பானர்ஜி, தடாலடி அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் இருந்து, எதிர்க்கட்சிகளை கையாளுவது வரை, அவரது நடவடிக்கைகளே அதிரடியாகத் தான் இருக்கும்.
ஆனால், அவருக்கு மென்மையான மறுபக்கமும் உண்டு. பெங்காலி மொழியில் விதவிதமாக கவிதைகள் எழுதி அசத்தக் கூடியவர்; மிகச்சிறந்த ஓவியரும் கூட.
தன்னை சந்திக்க வரும் தலைவர்களுக்கு, தான் வரைந்த ஓவியங்களை பரிசளித்து மகிழ்வார். இப்படிப்பட்ட மம்தா, இப்போது வேறு ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இவருக்கு ஹிந்தியில் ஓரளவு பேசத் தெரியும்; ஆனால், படிக்கவோ, எழுதவோ தெரியாது. சமீபகாலமாக ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்தியை முறையாக படித்து வந்தார்; இப்போது, அதில் ஓரளவு தேர்ச்சி அடைந்து விட்டார்.
இதையடுத்து, ஹிந்தியில் சில பக்திப் பாடல்களை எழுதி, அதற்கு தானே இசையமைத்து, அவரே பாடியுள்ளார்; இதை, 'சிடி'யாகவும் வெளியிட்டுள்ளார்.
இதைக் கேட்ட சில திரைப்பட இசையமைப்பாளர்கள், 'நம்பவே முடியவில்லை; மம்தா, அனைத்து துறைகளிலும் அசத்துகிறாரே...' என, பாராட்டி உள்ளனர்.
எதிர்க்கட்சியினரோ, 'மம்தா, தேர்தலில் தோல்வி அடைந்தாலும், திரைப்படங்களுக்கு இசையமைக்க போய்விடுவார்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.

