PUBLISHED ON : பிப் 03, 2024 12:00 AM

'மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறைந்து, பல ஆண்டுகள் ஆன பின்னும், அவர்கள் மீதான கோபம், முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தீரவில்லை போலிருக்கிறது...' என்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை அமைத்துள்ளன.
மேற்கு வங்கத்தில், இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக, மம்தா அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ், திரிணமுல் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இடையே வார்த்தை போர் நிலவியது.
ஆத்திரம் அடைந்த மம்தா, 'இந்த கூட்டணி உடைய வேண்டும் என விரும்பியவர்கள், டில்லியில் உள்ள இருவர் தான். காங்கிரஸ் முன்னணி தலைவர்களும், எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களும் கூட்டணி தொடர வேண்டும் என்றே விரும்பினர்...' என்றார்.
இது குறித்து பேசிய திரிணமுல் கட்சியினர், 'மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியையும், காங்., தலைவர் கார்கேயின் உதவியாளர் ஒருவரையும் குறிவைத்து தான் மம்தா இப்படி பேசியுள்ளார். அதிலும், இந்த பிரச்னை ஏற்படுவதற்கு மூல காரணமே யெச்சூரி தான் என நம்புகிறார்...' என்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினேரோ, 'ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் நாங்கள். எங்களை அடையாளம் இல்லாமல் அழிக்க மம்தா முயற்சிக்கிறார். அதற்கு தான், சம்பந்தமே இல்லாமல் யெச்சூரியை குறி வைக்கிறார்...' என, புலம்புகின்றனர்.

