PUBLISHED ON : ஜன 16, 2025 12:00 AM

'அரசியல்வாதிகள் எல்லாம், எப்படி இவ்வளவு சாமர்த்தியமாக பேச கற்றுக் கொள்கின்றனர் என தெரியவில்லை...' என்று, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான அசோக் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அங்குள்ள பத்திரிகையாளர்கள்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி கூட்டணியில் பா.ஜ.,வுடன், மத்திய அமைச்சர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இடம் பெற்றுஉள்ளது.
முதல்வர் சித்தராமையா, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய முறைகேடு வழக்கில்சிக்கியுள்ளதால், அவருக்கு எதிராக பா.ஜ.,வினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த போராட்டங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை.
இது குறித்து, சமீபத்தில் அசோக்கிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 'உங்களுக்கும், குமாரசாமிக்கும் கருத்து வேறுபாடு இருப்பது போலிருக்கிறதே. நீங்கள் நடத்தும் போராட்டங்களில் அவர் பங்கேற்கவில்லையே...' என்றனர்.
அதற்கு அசோக், 'நானும் குமாரசாமியும், பாலும் தேனும் போன்றவர்கள். இரண்டையும் கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது. ஆனால், உங்களைப் போன்றவர்கள், பாலில் எலுமிச்சையை கலந்து, நட்பை பிரித்து விடுவீர்கள் போலிருக்கிறதே...' என, நகைச்சுவையாக பேசினார்.
பத்திரிகையாளர்களோ, 'வாய் சாமர்த்தியம் மட்டும் இல்லை என்றால், அரசியலில் குப்பை கொட்டுவது கடினம்...' என்றபடியே, நடையை கட்டினர்.