PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

'இவரால் எந்த காலத்திலும் பீஹார் முதல்வராக முடியாது...' என, அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த தேர்தலில் தவறவிட்ட ஆட்சியை இந்த முறை பிடித்து விட வேண்டும் என்பதில் தேஜஸ்வி யாதவ் உறுதியாக உள்ளார். இதற்காக, மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, தொண்டர்களை ஊக்குவித்து வருகிறார்.
ஆனால், இவரது கனவுக்கு மிகப் பெரிய சவாலாக, இவரது மூத்த சகோதரரும், பீஹார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் விளங்கி வருகிறார்.
பீஹார் முன்னாள் முதல்வரான லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்; இளைய மகன் தேஜஸ்வி. தேஜ் பிரதாபின் கோமாளித்தனமான நடவடிக்கை காரணமாக, கட்சியின் தலைமை பொறுப்பை, தேஜஸ்வியிடம் ஒப்படைத்தார் லாலு பிரசாத் யாதவ்.
இது, தேஜ் பிரதாபுக்கு பிடிக்கவில்லை. இதனால், கட்சிக்குள் இருந்தபடியே தேஜஸ்வி யாதவை கவிழ்க்க நேரம் பார்த்து வருகிறார்.
இதை கூர்ந்து கவனித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'தேஜஸ்வி யாதவை தோற்கடிக்க நாங்கள் பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை; எல்லாவற்றையும் அவரது அண்ணனே பார்த்துக் கொள்வார்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.