
'கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படாமல், கிடைக்காததை நினைத்து அழுது புலம்புவது ஏன்...?' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து, பிற கட்சி அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.
டில்லியில் தற்போது, முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, அவருக்கு, டில்லி சிவில் லைன் பகுதியில், அரசு பங்களா ஒதுக்கப் பட்டிருந்தது.
இந்த பங்களா, மத்திய அரசின் நகர்ப்புற வீட்டு வசதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு அனுமதியின்றி, இந்த பங்களாவை பல கோடி ரூபாய் செலவழித்து ஆடம்பர பங்களாவாக கெஜ்ரிவால் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததும், அந்த பங்களாவை காலி செய்தார்.
அதன்பின், தேசிய கட்சியின் தலைவர் என்ற முறையில், தனக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டும் என, கெஜ்ரிவால் சட்டப் போராட்டம் நடத்தினார். கோர்ட் உத்தரவின்படி, தற்போது அவருக்கு டில்லி லோதி எஸ்டேட் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலோ, 'நான் விரும்பிய பங்களாவை தராமல், போதிய வசதி இல்லாத பங்களாவை ஒதுக்கியுள்ளனர்...' என, புலம்புகிறார்.
மற்ற கட்சியினரோ, 'தேசிய கட்சியின் தலைவராக இருப்பவருக்கு, நல்ல வசதியான பங்களாவில் வாடகை கொடுத்து வசிப்பதற்கு கூட பணம் இல்லாமல் போய் விட்டதா...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.

