PUBLISHED ON : மார் 16, 2024 12:00 AM

'கொஞ்சமாவது அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்; இல்லையெனில் இப்படித் தான் கிண்டலுக்கு ஆளாக நேரிடும்...' என, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த சில தேர்தல்களாகவே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, படுதோல்விகளை சந்தித்து வருகிறது.
பெயரளவுக்கு வேட்பாளர்களை நிறுத்தி, வேண்டா வெறுப்பாக தேர்தல்களை சந்திப்பதாக, மாயாவதி மீது அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.
'அவர் மீதான வழக்குகள் துாசு தட்டப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது தான் இதற்கு காரணம்' என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில் தான், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.,வான உமா சங்கர் சிங், பா.ஜ.,வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக சர்ச்சை எழுந்தது.
அடுத்த சில நாட்களிலேயே, மாயாவதியின் அரசியல் வாரிசாகக் கருதப்படும், அவரது சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்திற்கு, மத்திய அரசு, 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டது.
'ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளித்ததற்கு பரிசாகவே, மாயாவதி கட்சிக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது...' என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
மாயாவதி தரப்பினரோ, 'ஆகாஷ் ஆனந்திற்கு நாங்கள் பாதுகாப்பு கேட்கவில்லை. அவர்களாகவே அளித்துள்ளனர். இதற்கு எங்களை கிண்டலடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை...' என, குமுறுகின்றனர்.

