PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

'இவர்களை எப்படித் தான் அடக்குவது...' என, கர்நாடகா காங்கிரசின் நிர்வாகிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளது, அந்த கட்சி மேலிடம்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையாவுக்கு வயதாகி விட்டது. அதனால், அவருக்கு பின், தற்போது துணை முதல்வராக பதவி வகிக்கும் சிவகுமார் தான் முதல்வர் ஆவார் என, சிவகுமார் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், 'சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளுக்கும் முதல்வராக தொடர்வார்' என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால், காங்கிரஸ் கட்சியில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து, 'முதல்வர் பதவி குறித்து யாரும் பேச கூடாது...' என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சித்தராமையாவின் மகனான காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'சித்தராமையாவுக்கு பின், தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு மட்டுமே முதல்வராகும் தகுதி உள்ளது...' என்றார். யதீந்திராவின் இந்த பேச்சு, கர்நாடகா காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசலை தீவிரமடைய வைத்துள்ளது.
'கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி, யதீந்திரா பேசியுள்ளார். சித்தராமையாவின் ஆதரவாளரான சதீஷ் ஜார்கிஹோளியை முதல்வராக்க தயாராகி வருகின்றனர்; அது நடக்காது. வரும் நவம்பரில் புரட்சி நடக்கும். கண்டிப்பாக சிவகுமார் முதல்வராவார்...' என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

