
'என்ன இருந்தாலும், ராஜ்யசபா தலைவர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்திருக்கக் கூடாது...' என கவலைப்படுகின்றனர், டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள்.
துணை ஜனாதிபதியும்,ராஜ்யசபா தலைவருமானஜக்தீப் தன்கர், இதற்கு முன், மேற்கு வங்க மாநில கவர்னராக பதவி வகித்தார். அப்போது, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், ஜக்தீப் தன்கருக்கும் இடையே நடந்த மோதல், இந்திய அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
கவர்னர் என்றும்பாராமல், ஜக்தீப் தன்கரை குழாயடி சண்டையில்திட்டுவது போல் மம்தா திட்ட, பதிலுக்கு ஜக்தீப்பும், எதிர்க்கட்சி தலைவரைப் போல சண்டைக்கு இறங்க, இவர்கள் மோதல் அப்போது அனலை கிளப்பியது.
இப்போது அந்த மோதல், ராஜ்யசபாவிலும் தொடர்கிறது. திரிணமுல் எம்.பி.,க்களுக்கும், ஜக்தீப் தன்கருக்கும் தினமும் காரசாரமான வாதங்கள் நடக்கின்றன.
திரிணமுல் எம்.பி.,க்களுக்கு ஆதரவாக மற்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் களம் இறங்கவே, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
'நடுநிலையுடன் செயல்பட்டு சபையை நடத்த வேண்டிய தலைவர், ஆளுங்கட்சி அமைச்சர் போல் பேசுவது சரியா...' என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிஎம்.பி.,க்கள், ஜக்தீப் தன்கருக்கு எதிராகநம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
'திரிணமுல் காங்., கட்சியினர், தங்கள் பழைய பகையை தீர்ப்பதற்காக, இப்போது ஜக்தீப் தன்கருக்கு எதிராக செயல்படுகின்றனர். இது சரியில்லை...' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.