PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

'நல்லதுக்கே காலம் இல்லை...' என விரக்தியுடன் கூறுகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரான, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தல் தோல்வியால் தவித்து வந்த சந்திரசேகர ராவுக்கு, கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது. சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் தலைமையில் ஓரணியும், மகள் கவிதா தலைமையில் ஓரணியும் செயல்பட்டு வந்தன.
இதற்கிடையே, பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை, தற்போதைய காங்கிரஸ் அரசு துாசு தட்டி வருகிறது. இதில், சந்திரசேகர ராவுக்கு எதிராகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை விமர்சித்த கவிதா, 'ராமா ராவுடன் சேர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் சந்திரசேகர ராவை அரசியலை விட்டு ஒழிக்க சதி செய்கின்றனர்...' என்றார். இதையடுத்து, மூத்த தலைவர்களை விமர்சித்ததாக கூறி, கவிதாவை கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்தார், சந்திரசேகர ராவ்.
இதனால், ஆத்திரமடைந்த கவிதா, 'என் தந்தைக்கு உடல் நல பிரச்னைகள் உள்ளன. இதை, ராமா ராவும், அவரது ஆதரவாளர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இவர்கள் என்ன சஸ்பெண்ட் செய்வது... நானே போகிறேன்...' என கூறிவிட்டு, கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.
தெலுங்கானா மக்களோ, 'பங்காளி சண்டை சந்திக்கு வந்து விட்டது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.