PUBLISHED ON : ஜூலை 21, 2026 12:00 AM

'இது என்ன புது போட்டியாக இருக்கிறது...' என்ற கவலையிலும், குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளார், ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பவன் கல்யாண், தற்போது துணை முதல்வராக உள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக விளங்கிய பவன் கல்யாண், சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், 'நான், 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்; ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் சென்று, மக்கள் போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன்.
'இப்போது தான், துணை முதல்வராக முடிந்திருக்கிறது. ஆனால், அண்டை மாநிலத்தில், கட்சி துவங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து, முதல்வராகியிருக்கிறார் ஒரு நடிகர்...' என, தமிழக முதல்வர் விஜய் பற்றி வயிற்றெரிச்சலுடன் பேசினார்.
இதனால், அடுத்த தேர்தலில் தனியாக போட்டியிட்டு, முதல்வராகி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார், பவன் கல்யாண். ஆனால், பிரபல தெலுங்கு நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான, மறைந்த என்.டி.ராம ராவின் பேரன், ஜூனியர் என்.டி.ஆர்., விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக ஆந்திராவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பவன் கல்யாணை விட, ஜூனியர் என்.டி.ஆர்., ஆந்திராவில் மிகவும் பிரபலம் என்பதால், முதல்வர் கனவில் இருந்த பவன் கல்யாண், விரக்தி அடைந்துள்ளார்.
