PUBLISHED ON : டிச 13, 2025 03:17 AM

'இந்த வெளிநாட்டு பயண பஞ்சாயத்து, எங்கு போய் முடியுமோ...' என கவலைப்படுகின்றனர், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர்.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும் போதெல்லாம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதாக, பா.ஜ.,வினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர். 'லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை...' என, பா.ஜ.,வினர் சமீபத்தில் பார்லிமென்டில் கடுமையாக சாடினர்.
இதற்கு, காங்கிரஸ் எம்.பி.,யும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா பதிலடி கொடுத்தார். 'நம் நாட்டில் இருப்பதைவிட, அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதையே பிரதமர் மோடி வாடிக்கையாக வைத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளிநாடு செல்லும் போது மட்டும் பா.ஜ.,வினர் வரிந்து கட்டுவது ஏன்...?' என, ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.,வினரோ, 'பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் திடீரென ஏற்பாடு செய்யப்படுவது அல்ல; பல மாதங்களுக்கு முன்பே, அதற்கு திட்டமிடப்படும். சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களை சந்திப்பது, இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்வது என, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இதில் நடக்கும்.
'இந்த விஷயத்தில், ராகுலின் பயணத்துடன் பிரதமரின் பயணத்தை ஒப்பிடுவது, பிரியங்காவின் அறியாமையை காட்டுகிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.

