PUBLISHED ON : நவ 24, 2025 12:24 AM

'எதிர்கால அரசியலை மனதில் வைத்துத் தான், இவரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர்...' என, பீஹாரைச் சேர்ந்த இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களில் பரபரப்பாக பேசப்பட்டவர், மைதிலி தாக்குர். இவருக்கு, 25 வயது தான் ஆகிறது. நாட்டுப்புற பாடகியான இவர், ஹிந்தி, போஜ்புரி மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
சமூக வலைதளங்களிலும் மைதிலி தாக்குர் மிகவும் பிரபலம். சட்டசபை தேர்தலில் இவரை அலிபுர் தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கியது, பா.ஜ., மேலிடம். மைதிலி, எளிதாக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானார்.
இதன் வாயிலாக, பீஹாரில் இளம் வயதில், எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையும், இவருக்கு கிடைத்தது. மைதிலி தாக்குர், சில ஆண்டுகளுக்கு முன், 'கண்ணான கண்ணே...' என்ற தமிழ் பாடலை பாடி, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு, தற்போது தமிழகம் முழுதும் வேகமாக பிரபலமாகி வருகிறது.
'இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ.,வின் பிரசார பீரங்கியாக மைதிலி தாக்குர் களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.

