PUBLISHED ON : ஜூலை 09, 2025 12:00 AM

'இவரா இப்படி பேசுவது...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
'பார்லிமென்டிற்கு உள்ளேயும் சரி... வெளியிலும் சரி; கறாராகத் தான் பேசுவார், கார்கே. அதிலும், காங்கிரஸ் தலைவரான பின், அவரது கறார் போக்கு அதிகமாகி விட்டது.
'எப்போதும் உர்ரென முகத்தை வைத்திருக்கிறார்; யாரிடமும் சிரித்து பேசுவது இல்லை...' என, அவருக்கு நெருக்க மானவர்கள் கூறுவது உண்டு. கார்கே மீதான இந்த பார்வை, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மாறிவிட்டது.
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கார்கேயுடன், காங்., மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால் ஆகியோரும் பங்கேற்று, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், 'பத்திரிகையாளர்களுக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும்...' என, வேண்டுகோள் விடுத்தார் வேணுகோபால்.
அப்போது குறுக்கிட்ட கார்கே, 'பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தான் மதிய உணவா... எங்கள் வீட்டில் கூட ஆள் இல்லை; சொந்த ஊருக்குசென்றுள்ளனர். அதனால், இங்கேயே சாப்பிடலாம் என நினைக்கிறேன்...' என்றார்.
இதைக் கேட்டதும், அங்கு பலத்த சிரிப்பொலி எழுந்தது. 'பரவாயில்லையே... கார்கேவுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு ஒளிந்திருக்கிறதே...' என, பத்திரிகையாளர்கள் முணுமுணுத்தனர்.