PUBLISHED ON : ஜூன் 25, 2025 12:00 AM

'இவர் அடங்க மாட்டார் போலிருக்கிறதே. இவருக்கு எப்படி கடிவாளம் போடுவது...' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பற்றி காட்டமாகக் கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
கேரளாவைச் சேர்ந்த சசி தரூர், காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர். தன் திறமைக்கு காங்கிரஸ் மேலிடம் போதிய அங்கீகாரம் தரவில்லை என்ற மனக்குமுறல், சசி தரூருக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.
இதனால், கட்சி மேலிடத்துக்கு எதிராக அவ்வப்போது குரல் எழுப்புவதை வழக்கமாக வைத்திருந்த அவர், சமீப காலமாக பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில், மத்திய அரசு சார்பில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட எம்.பி.,க்கள் குழுவில், தங்களை கலந்தாலோசிக்காமல் சசி தரூரை இடம்பெற செய்ததாக, காங்., தலைவர்கள் ஆவேசப்பட்டனர்.
ஆனால், சசி தரூரும் சரி, மத்திய அரசும் சரி; அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய பின்னும் பிரதமர் மோடியை பாராட்டுவதை சசி தரூர் விடுவதாக இல்லை. 'பிரதமர் மோடி, நம் நாட்டுக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத சொத்து...' என, சமீபத்தில் ஒரு நிகழ்வில் குறிப்பிட்டார்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், 'பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் செய்வதே நமக்கு பெரிய சவாலாக உள்ளது; இதில் சசி தரூர் வேறு, கட்சிக்குள் இருந்தபடியே குடைச்சல் கொடுத்து நம்மை புலம்ப வைக்கிறாரே...' என, கொதிக்கின்றனர்.