PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM

'எத்தனை முறை எச்சரித்தாலும், இவர் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அப்புறம் எப்படி கட்சியை காப்பாற்றுவது...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி புலம்புகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
சமீப காலமாக, காங்., கட்சியிலிருந்து பல முக்கிய தலைகள் ஓட்டம் பிடித்து வருகின்றனர். மிலிந்த் தியோரா, அசோக் சவான் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
இவர்களில் பலரும், அரசியல் ஆதாயத்துக் காக கட்சி மாறுவதாக, காங்., தலைமை குற்றம் சாட்டினாலும், நீண்ட நாட்களாகவே கட்சியில் இருக்கும் சில பிரச்னைகள் தான் இதற்கு காரணமாக உள்ளன.
'ராகுலை எளிதில் அணுக முடியவில்லை; அவரை சந்தித்து கட்சி பிரச்னைகளை பேச முடியவில்லை; எந்த விஷயத்துக்கும் உடனடியாக தீர்வு காண முடியவில்லை...' என்பது தான், கட்சி மாறுபவர்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்.
சமீபத்தில், ஹரியானா மாநில காங்., நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியது. இதற்கு தீர்வு காண, கோஷ்டி தலைவர்கள் சிலர், ராகுலின் யாத்திரை நடந்த, அசாம் மாநிலத்துக்கு விரைந்தனர்.
அவர்களில் சிலரை மட்டும் சந்தித்த ராகுல், 5 நிமிடங்கள் மட்டுமே அவர்களுடன் பேசி விட்டு, 'புறப்படுங்கள்...' எனக் கூறி விட்டார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், 'இவ்வளவு பேர் கட்சியை விட்டு ஓடியும், ராகுலின் நடவடிக்கையில் மாற்றம் இல்லையே... இந்த நிலை நீடித்தால், விரைவில் மொத்த கூடாரமும் காலியாகி விடும்...' என புலம்பியபடியே, ஹரியானாவுக்கு புறப்பட்டனர்.

