PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:35 AM

'தோல்விக்கான காரணத்தை ஆராயாமல், எதிர்க்கட்சிகளை குறை கூறுகிறாரே...' என, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குறித்து கவலைப் படுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.
கேரளாவில், கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, அந்த கட்சியைச் சேர்ந்த சதீசன், முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பினராயி விஜயன், இப்போது சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து, அது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். தோல்விக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பினராயி விஜயனோ, 'கேரள சட்டசபை தேர்தலின் போது, காங்கிரசின் ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும், எங்கள் ஆட்சியை பற்றி பொய் பிரசாரம் செய்து, மக்களை நம்ப வைத்து ஆட்சியை பிடித்து விட்டனர்...' என்கிறார்.
காங்கிரஸ் கட்சியினரோ, 'தோல்விக்கு பின்னும் இவர் திருந்திய மாதிரி தெரியவில்லையே...' என, பினராயி விஜயனை கிண்டல் அடிக்கின்றனர்.
