PUBLISHED ON : மார் 11, 2024 12:00 AM

'இந்த முறை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து விட மாட்டோம்...' என, திட்டவட்டமாக கூறுகின்றனர், கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர்.
இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில், இங்குள்ள, 20 தொகுதிகளில், 19 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே கைப்பற்றியது.
ஆளும் கட்சியாக இருந்தபோதும், இடதுசாரி கட்சியினர் தோல்வியை சந்தித்தனர். இதற்கு முக்கிய காரணம், காங்., முன்னாள் தலைவர் ராகுல்.
இவர், கடந்த தேர்தலில் இங்குள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதனால், கேரளா முழுதும் வீசிய ராகுல் அலையில், பெரும்பாலான தொகுதிகளை காங்கிரசே கைப்பற்றியது.
இந்த முறை, தேசிய அளவில் காங்கிரசும், இடதுசாரி கட்சியினரும், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், கேரளாவில் மட்டும் வழக்கம் போல, இரண்டு கட்சிகளும் பரம விரோதிகளாக மோதுகின்றனர்.
தற்போதும், கேரளாவின் வயநாடு தொகுதியிலேயே ராகுல் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ராஜாவின் மனைவி, ஆனி ராஜா களம் இறக்கப்பட்டுள்ளார்.
'இந்த முறை, கேரளாவில் காங்கிரசை அவ்வளவு எளிதாக வெற்றி பெற வைத்து விட மாட்டோம்; வயநாட்டில் வெற்றி பெற ராகுல் தடுமாறப் போகிறார். அதற்கேற்ப வியூகம் வகுத்து வருகிறோம். பொறுத்திருந்து பாருங்கள்...' என்கின்றனர், இடதுசாரி கட்சியினர்.

