PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

'ஏற்கனவே வயதாகி விட்டதாக கிண்டல் அடிக்கின்றனர். இதில், இவர் வேறு நம்மை சிக்கலில் மாட்டி விட்டு விட்டாரே...' என, பிரதமர் நரேந்திர மோடியை நினைத்து புலம்புகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில், தொடர்ச்சியாக இரண்டு முறை முதல்வராக யாரும் பதவி வகித்தது இல்லை என்ற எழுதப்படாத விதியை முறியடித்தவர், பினராயி விஜயன்.
அடுத்தாண்டு, கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மூன்றாவது முறையாக முதல்வராக ஆசைப்படுகிறார், பினராயி விஜயன். ஆனால், கட்சிக்குள் உள்ள அவரது அதிருப்தியாளர்களோ, 'பினராயி விஜயனுக்கு, 79 வயதாகி விட்டது; இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்...' என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தான், கேரளாவில் உள்ள விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் வந்தார். இதில், மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் பினராயி விஜயனும் பங்கேற்றார்.
இதில் பேசிய பிரதமர் மோடி, 'மேடையில் என்னுடன் பினராயி விஜயன் இருப்பது, எதிர்க்கட்சியினர் பலரது துாக்கத்தை கெடுத்திருக்கும்...' என்றார்.
இது, பினராயி விஜயன் அதிருப்தியாளர்களுக்கு அல்வா சாப்பிட்டது போலாகி விட்டது. 'பினராயி விஜயன் பா.ஜ., பக்கம் சாய்ந்து விட்டார். அவரை கழற்றி விடுவது நல்லது...' என, மார்க்சிஸ்ட் மேலிடத்திடம் போட்டுக் கொடுக்க தயாராகி வருகின்றனர்.