PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

'வழக்கம் போல் பார்வையாளராகவே இருந்து வேடிக்கை பார்த்திருக்கலாம்; களத்தில் இறங்கியது தவறு தான்...' என புலம்புகிறார், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங்.
ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களில் செல்வாக்கு அதிகம். இதனால், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கை, ராஜ்யசபா எம்.பி.,யாக்கினார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
தேர்தல் நேரங்களில் சீக்கியர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு ஹர்பஜன் உதவியாக இருப்பார் என கருதி, இந்த முடிவை எடுத்தார்.
ஆனால், ஹர்பஜனுக்கோ அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆம் ஆத்மி கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. பார்லிமென்ட் நடக்கும் நாட்களில், வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு வருவது மட்டுமே, அவரது அரசியலாக இருந்தது.
சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில், ஹர்பஜனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து பிரசாரம் செய்ய வைத்தனர், ஆம் ஆத்மி கட்சியினர். அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் தான், ஹர்பஜன் அதிகமாக பிரசாரம் செய்தார். ஆனால், அந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆம் ஆத்மி தோற்று விட்டது.
இதனால் விரக்தியில் இருக்கும் ஹர்பஜன் சிங், 'கிரிக்கெட்டை ரசிக்கும் மக்கள், அரசியலையும் ரசிப்பர் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டோமோ...' என, புலம்புகிறார்.

