PUBLISHED ON : அக் 04, 2025 12:00 AM

'ஆந்திராவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் என பெருமை பேசும் சந்திரபாபு நாயுடு, இப்படி செய்வார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை...' என, கவலையுடன் பேசுகின்றனர், அங்குள்ள இளம் தலைமுறையினர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடு ஏற்கனவே ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது தான், இங்கு தகவல் தொழில்நுட்ப துறை அபார வளர்ச்சி அடைந்தது. 'ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியது சந்திரபாபு நாயுடு தான்...' என, அவரது கட்சியினர் பெருமை பேசுவது வழக்கம் .
இப்படிப்பட்ட சந்திரபாபு நாயுடு தான், தற்போது அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழு, சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகளை ஆய்வு செய்து, அதில் விதிமீறல் இருப்பதாக தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த முடிவு, ஆந்திராவில் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
'கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில், சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இது, சர்வாதிகாரமான முடிவு...' என புலம்புகின்றனர், அங்குள்ள இளைஞர்கள்.