PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

'தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய் விட்டது...' என, நிம்மதி பெருமூச்சு விடுகிறார், கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா.
கடந்த 2023ம் ஆண்டுசட்டசபை தேர்தலில் காங்., ஜெயித்ததுமே, முதல்வர் பதவிக்காக சித்தராமையாவுக்கும், தற்போது துணை முதல்வராக உள்ள, மாநில காங்., தலைவரானசிவகுமாருக்கும் இடையே கடும் போட்டிநிலவியது.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலையிட்டதால், சித்தராமையாவுக்குமுதல்வர் பதவி கிடைத்தது. அவரிடம் இருந்து அந்த பதவியைதட்டிப் பறிப்பதற்கு, கர்நாடக காங்கிரசில் உள்ள பல மூத்த தலைவர்களிடையே போட்டி நிலவுகிறது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம்இருந்து, சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாக சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், சித்தராமையாவின் முதல்வர் பதவி பறிக்கப்படும் அபாயம் இருந்தது.
இந்த நேரத்தில் தான், சித்தராமையாவுக்கான சோதனைக் களமாக, சென்னபட்டணா உட்பட மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. 'இதில், காங்கிரஸ் தோல்வி அடைந்தால், சித்தராமையாவின் முதல்வர் பதவி காலியாகி விடும்' என, பேசப்பட்டது.
ஆனால், மூன்று தொகுதிகளிலுமே காங்கிரஸ்வெற்றி பெற்று விட்டது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள சித்தராமையா, 'இனி யார் நினைத்தாலும் என்னிடமிருந்து முதல்வர் பதவியை பறிக்க முடியாது...' என, தன் ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.