PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

'இவர் தான் புத்திசாலித்தனமாக ஆட்சி நடத்துகிறார்...' என, பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பகவந்த் மான் பற்றி மகிழ்ச்சியுடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
டில்லியில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, அங்குள்ள கவர்னருடன் மோதல் போக்கை பின்பற்றினார். ஆவேசமடைந்த கவர்னர், கெஜ்ரிவால் ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் துாசு தட்டினார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கெஜ்ரிவாலே சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. கடைசியில், டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியும் பறிபோனது.
ஆனால், கெஜ்ரிவாலின் சிஷ்யரான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இந்த விஷயத்தில் தெளிவாகவே காய் நகர்த்தி வருகிறார். சமீபத்தில், பகவந்த் மானின் மகளுக்கு முதல் பிறந்த நாள் விழா நடந்தது.
இதற்கு சிறப்பு விருந்தினராக கெஜ்ரிவாலை மட்டுமல்லாமல், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவையும் பகவந்த் மான் அழைத்திருந்தார். கேக் வெட்டும்போது, கவர்னரையும் அழைத்து தன் பக்கத்தில் நிற்க வைத்தார், பகவந்த் மான். பின், அனைவரும் இணைந்து பஞ்சாபி பாடலுக்கு ஜோராக நடனமும் ஆடினர்.
இதை பார்த்த அம்மாநில ஆம் ஆத்மி கட்சியினர், 'மோதல் போக்கை பின்பற்றினால் எந்த பலனும் இல்லை என்பது பகவந்த் மானுக்கு நன்றாக தெரிந்துவிட்டது.
'அதனால் தான், கவர்னரை சிறப்பு விருந்தினராக அழைத்து, அவருடன் சுமுக உறவை தக்க வைத்துள்ளார். அவரது குரு கெஜ்ரிவாலுக்கு இது தெரியாம போயிடுச்சே...' என, ஆதங்கப்படுகின்றனர்.