PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM

'அதிகப்படியான அன்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடுகிறது...' என, புலம்புகிறார், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்ததால், அடுத்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார், அகிலேஷ்.
இதற்காக மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் லக்னோவுக்கு சென்றிருந்தார். அப்போது, கட்சி நிர்வாகி ஒருவர், தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி, சாலையில் வீசி, தீ வைத்து எரித்தார்.
இதுகுறித்து சக நிர்வாகிகள், அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர், 'என் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போடுகின்றனர். அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து முறையிட பலமுறை முயற்சித்தேன்.
'ஆனால் அவரை சுற்றியுள்ளவர்கள், என்னை சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். கட்சியின் தலைவரை, ஒரு நிர்வாகியால் கூட சந்திக்க முடியவில்லை என்றால், சாதாரண தொண்டர்கள் எப்படி சந்திக்க முடியும். இப்படி இருந்தால், எப்படி ஆட்சியை பிடிக்க முடியும்...' என, புலம்பித் தீர்த்தார்.
இதைக் கேள்விப்பட்ட அகிலேஷ், 'கட்சியின் ஒட்டுமொத்த மானத்தையும் இந்த நிர்வாகி கப்பலேற்றி விட்டார். பா.ஜ.,வினர் இதை வைத்தே நம்மை கிண்டலடிப்பரே. இதற்கு எப்படி பதில் அளிப்பது...' எனக் கவலையில் ஆழ்ந்துள்ளார்.

