PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

'இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தவர், இப்போது பாய்கிறாரே...' என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர் இங்குள்ள மக்கள்.
ராஜஸ்தானில் கடந்த, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றது. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வசுந்தராவுக்கு இங்கு செல்வாக்கு அதிகம். இதனால், எப்படியும் முதல்வர் பதவி தனக்குத்தான் கிடைக்கும் என நினைத்திருந்தார், வசுந்தரா.
ஆனால், பா.ஜ., மேலிடமோ, வழக்கம்போல் புதுமுகமான, பஜன்லால் சர்மாவை முதல்வராக நியமித்து விட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியில், தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார், வசுந்தரா.
இந்த நிலையில் தான், சமீபத்தில் அவரது தொகுதியான ஜல்ராப்தானைச் சேர்ந்த மக்கள், 'தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது. அதிகாரிகளிடம் கெஞ்சியும் எந்த வேலையும் நடக்கவில்லை...' என, வசுந்தராவிடம் புகார் அளித்தனர்.
அவ்வளவு தான்; வசுந்தராவுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. அதிகாரிகளை போனில் அழைத்து, குமுறி தீர்த்து விட்டார்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே அலறியடித்து ஓடி வந்த அதிகாரிகள், வசுந்தராவிடம் மன்னிப்பு கேட்டதுடன், தண்ணீர் பிரச்னையையும் தீர்த்து வைத்தனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள், 'முதல்வர் பதவியில் இல்லா விட்டாலும், வசுந்தரா தான், ராஜஸ்தானின் ராணி என்பதை நிரூபித்து விட்டார்...' என, பாராட்டுகின்றனர்.

