PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

'அடுத்த முதல்வர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது போலிருக்கிறதே...' என, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, இதற்கு முன் முதல்வராக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதியின் சந்திரசேகர ராவ், கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தார்.
அதன்பின், அவரது மகளும், தெலுங்கானா எம்.எல்.சி.,யுமான கவிதா, டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பல மாத சிறைவாசத்துக்குப் பின் ஜாமினில் வந்துள்ளார்.
இதற்கிடையே, 'அடுத்த சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்ட்ர சமிதி வெற்றி பெற்றால், சந்திரசேகர ராவின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் தான் முதல்வராவார்' என, அவரது கட்சியினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தான், கடந்த ஆட்சிக்காலத்தில் ஹைதராபாதில் நடந்த கார் பந்தயம் தொடர்பான ஊழல் வழக்கில், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு ஆளாகியுள்ளார் ராமாராவ்.
தற்போது வீட்டுச் சிறையில் இருக்கும் அவர், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
'சந்திரசேகர ராவ் குடும்பத்துக்கும், சிறைக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லையே...' என, புலம்புகின்றனர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர்.

