PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

'என்ன இருந்தாலும், பா.ஜ.,வுக்கு சந்திரபாபு நாயுடு இந்த அளவுக்கு முட்டுக் கொடுக்கக் கூடாது...' என, கண்டிப்புடன் கூறுகிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு 2024ல் லோக்சபா தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடு கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.
லோக்சபா தேர்தலிலும் தெலுங்கு தேசம், 16 தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறது. 2024ம் ஆண்டு பட்ஜெட்டில், ஆந்திராவுக்கு அதிக திட்டங்களை அறிவித்த மத்திய அரசு, நடப்பாண்டு பட்ஜெட்டில் பீஹாருக்கு அதிக திட்டங்களை அறிவித்துவிட்டு, ஆந்திராவை கண்டுகொள்ளவில்லை.
பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் வருவதால், அங்கு கூடுதல் திட்டங்களை அறிவித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆனால், சந்திரபாபு நாயுடுவோ, 'நம் நாட்டை வளர்ச்சி அடைந்ததாக மாற்றும் நோக்கத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், மாநிலங்கள் சில தியாகங்களை செய்துதான் தீர வேண்டும்...' என, பா.ஜ.,வுக்கு ஆதரவாகப் பேசினார்.
ஜெகன்மோகன் ரெட்டியோ, 'கூட்டணி கட்சிக்கு ஆதரவாக பேச வேண்டியதுதான்; ஆனால், சந்திரபாபு பேசுவதெல்லாம் ரொம்ப ஓவராகத்தான் இருக்கிறது...' என, கடுப்புடன் கூறுகிறார்.