PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை என்பதை நிரூபித்து விட்டார்...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள பொதுமக்கள்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், ஜிதன்ராம் மஞ்சி. கடந்த 2014ல், நிதிஷ் குமாருக்கு அரசியல் ரீதியான நெருக்கடி ஏற்பட்டபோது, தன் விசுவாசியான ஜிதன்ராம் மஞ்சியை முதல்வராக்கினார்.
நெருக்கடி தீர்ந்த பின், மீண்டும் முதல்வர் பதவியை கேட்டபோது, தர மறுத்தார் ஜிதன்ராம் மஞ்சி. இதனால், ஜிதன்ராம் மஞ்சியை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கிய நிதிஷ் குமார், 'இவரை போன்ற துரோகியை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை...' என, ஆவேசமாக கூறினார்.
இதையடுத்து, ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா என்ற கட்சியை துவக்கிய ஜிதன்ராம் மஞ்சி, பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமாகி, தற்போது மத்திய அமைச்சராகவும் வலம் வருகிறார்.
அடுத்த சில மாதங்களில், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஜிதன்ராம் மஞ்சிக்கு, தலித் சமூகத்தினர் இடையே செல்வாக்கு உள்ளது. இதனால், ஆதரவை பெறுவதற்காக சமீபத்தில் அவரது வீட்டுக்கு சென்றார், நிதிஷ் குமார்.
அவரை கட்டியணைத்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த நிதிஷ் குமார், 'ஜிதன்ராம் மஞ்சி, என் நீண்ட கால நண்பர். எங்கள் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது...' என, நெகிழ்ச்சியாக பேசினார்.
பீஹார் மக்களோ, 'அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.