PUBLISHED ON : பிப் 24, 2024 12:00 AM

'மக்களுக்கு நல்லது செய்து ஓட்டு வாங்கி வெற்றி பெறுவதை விட, சினிமா வாயிலாக பிரசாரம் செய்து வெற்றி பெற்று விடலாம் என அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்...' என்று கவலைப்படுகின்றனர்,ஆந்திர மாநில மக்கள்.
இங்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, விரைவில் சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.
தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் மக்களிடையே சினிமா மோகம் அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தி பிரசாரம் செய்ய ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் திட்டமிட்டுள்ளன.
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில், பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஒரு படத்தை இயக்குகிறார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்தி உள்ள திட்டங்கள், அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான மறைந்த ராஜசேகர ரெட்டியின் பெருமைகளை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது.
இதற்கு பதிலடியாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் சார்பில், ராஜ்தானி பைல்ஸ் என்ற படம் தயாராகி வருகிறது. ஆந்திராவில் மூன்று தலைநகரத்தை அமைப்பதால் ஏற்படும் பாதிப்பு, குழப்பம் ஆகியவற்றை மையமாக வைத்து, இந்த படம் எடுக்கப்படுகிறது.
'சினிமாவை பார்த்து ஓட்டு போடும் காலம் மலையேறி விட்டது என்பது இன்னும் இந்த அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லையே...' என ஆதங்கப்படுகின்றனர், ஆந்திர மக்கள்.