PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

'மத்திய அமைச்சர்களில் இவர் சற்று வித்தியாசமானவராக இருக்கிறார்...' என, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவத் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், சக அமைச்சர்கள்.
ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க் களுக்கு, அவர்களது சொந்த ஊர்களில் இருந்து டில்லிக்கு வருவதற்கு பல சலுகைகள் உள்ளன. பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில் இவர்கள், தங்கள் சொந்த ஊர்களில் இருந்து டில்லிக்கு விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம்; இதற்கான செலவை அரசே ஏற்கும்.
மத்திய அமைச்சர்களுக்கு இன்னும் கூடுதல் சலுகைகள் உண்டு. இவர்கள் பார்லிமென்ட் நடக்காத நாட்களிலும், சலுகை கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கலாம்.
ஆனால், இந்த விஷயத்தில் கஜேந்திர சிங் ஷெகாவத் மாற்றி யோசித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இவர், பெரும்பாலும், டில்லியில் இருந்து, தன் தொகுதியான ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு, 650 கி.மீ., ரயிலில் தான் பயணிக்கிறார்.
இது குறித்து, அவரிடம் யாராவது கேட்டால், 'நான் சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறேன். டில்லியில் இருந்து ஜோத்பூருக்கு ரயிலில் பயணிப்பது மிகச் சிறந்த அனுபவத்தை தரும்; அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. என் ரயில் பயணங்கள், சுற்றுலா துறையையும், சுற்றுலா பயணியரையும் சிறிதளவாவது ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்; மற்றபடி இதில் விளம்பர வெளிச்சம் எதுவுமில்லை...' என்கிறார்.

