PUBLISHED ON : அக் 18, 2024 12:00 AM

'காங்கிரசில் இருந்தாலாவது, ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்திருக்கலாம்; இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்...' என,முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை பார்த்து பரிதாபப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த குலாம்நபி ஆசாத்,காங்., மூத்த தலைவர்களில்ஒருவராக திகழ்ந்தவர். காஷ்மீர் முதல்வராகவும், நரசிம்மராவ், மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர்; ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துஉள்ளார்.
ஆயினும், காங்கிரசில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை எனக் கூறி, அந்த கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற பெயரில், தனிக் கட்சியை துவக்கினார்.
அவர், காங்கிரசில் இருந்து விலகிய பின்னணியில்பா.ஜ., இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி பதவி தருவதாக, அவருக்கு பா.ஜ., ஆசை வார்த்தை காட்டியதாக காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.
ஆனால், பா.ஜ., அவரை கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில் ஆசாத் கட்சி, 23 தொகுதிகளில்போட்டியிட்டு, ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை; சில தொகுதிகளில் இவரது வேட்பாளர்கள், 'நோட்டா'வை விட குறைவான ஓட்டுகளே பெற்றனர்.
'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது, குலாம்நபி ஆசாத்தின் நிலை...' என, கிண்டல் அடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.