PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

'இவர், நம்பத்தகுந்த அரசியல்வாதி இல்லை என்பது உண்மைதான் போலிருக்கிறது...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் பற்றி சந்தேகத்துடன் பேசுகின்றனர், பா.ஜ.,வினர்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன், சூழலுக்கு ஏற்ப மாறி மாறி கூட்டணி அமைத்து, அதிகாரத்தில் உடும்புப் பிடியாக ஒட்டிக் கொண்டிருப்பவர்தான், நிதிஷ் குமார்.
'யார், எப்படி போனாலும் பரவாயில்லை;எனக்கு தேவை முதல்வர் பதவி...' என்பதுதான், இவரது கொள்கை. பார்ப்பதற்கு அப்பாவி போல் தெரிந்தாலும், கில்லாடி அரசியல்வாதி.
தற்போது, பா.ஜ., ஆதரவுடன் முதல்வர் பதவியில் உள்ளார். இந்தாண்டு இறுதியில் பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இப்போதே, நிதிஷ் குமாரிடம் தடுமாற்றம் துவங்கி விட்டது.
சமீபத்தில் நிதிஷ் குமாரை சந்தித்த செய்தியாளர்கள், 'ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ், தங்களது இண்டியா கூட்டணியில் சேரும்படி உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே...' எனக் கேட்டனர்.
அதற்கு நிதிஷ் குமார், 'அப்படியா...?' என, பதில் கேள்வி எழுப்பிவிட்டு, புறப்பட்டு விட்டார். இந்த விவகாரம், பீஹார் பா.ஜ.,வினரிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
'லாலு கட்சியுடன் எந்த காலத்திலும் கூட்டணியில்லை என அடித்துக் கூறுவதில் நிதிஷுக்கு என்ன தயக்கம்... கூட்டணி விஷயத்தில் இரண்டு பக்கமும், 'துண்டு' போட்டு வைக்க முயற்சிக்கிறாரா...?' என கொந்தளிக்கின்றனர், பா.ஜ.,வினர்.