PUBLISHED ON : ஆக 22, 2025 12:00 AM

'தலைவர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களுக்கு கீழ் செயல்படும் நிர்வாகிகள் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே...' என, கர்நாடக காங்கிரசில் நடக்கும் கலாட்டாவை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளனர், அந்த கட்சியின் மேலிட தலைவர்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்ற, துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் நீண்ட நாட்களாகவே முயற்சித்து வருகிறார்.
பல முறை முயற்சித்தும், அவரால் முதல்வர் பதவியை அடைய முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், சித்தராமையாவையும், சிவகுமாரையும் டில்லிக்கு அழைத்து, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
'முதல்வர் பதவி குறித்து இனி வாய் திறக்கக் கூடாது...' என, கடுமையாக எச்சரித்து அனுப்பியது, காங்., மேலிடம். ஆனாலும், சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் அடங்குவதாக தெரியவில்லை.
சென்னகிரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், சிவகுமார் ஆதரவாளருமான பசவராஜ் சிவகங்கா, 'வரும் டிசம்பரில் சித்தராமையா, முதல்வர் பதவியை சிவகுமாரிடம் ஒப்படைப்பார்...' என சமீபத்தில் கூறினார். அவரது இந்த பேச்சு, காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகுமாரோ, 'எனக்கும், பசவராஜ் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; ஆதரவாளர்களை என்னால் அடக்க முடியவில்லை...' என புலம்புகிறார்.