PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

'சினிமாவில் கூட இப்படிப்பட்ட பரபரப்பான காட்சிகளை பார்க்க முடியாது...' என, ஆச்சரியத்துடன் கூறுகின்றனர், கர்நாடக மக்கள்.
இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அவரிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்காக, இரண்டு ஆண்டுகளாகவே தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், மாநில காங்., தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார்.
பழுத்த அரசியல்வாதியான சித்தராமையாவோ, அவ்வளவு எளிதாக முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதாக இல்லை. சமீபத்தில் சிவகுமாரும், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, அமைச்சர் பதவி கேட்கும்படி துாண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்.
இதனால் எரிச்சலடைந்த சித்தராமையா, 'நான், முதல்வர் பதவியிலிருந்து விலகுவேன் என்று சிலர் கனவு காண்கின்றனர். மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக இருப்பேன். இடைவிடாமல் பொய் பேசி வருவோருக்கு இதுதான் என் பதில். அவர்களது பகல் கனவு பலிக்காது...' என, ஆவேசமாக கூறினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சிவகுமார், 'எதுவாக இருந்தாலும், இனி கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
'சித்தராமையா முதல்வராக இருக்கும்போது, என் பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிய வேண்டிய அவசியம் இல்லை...' என அந்தர்பல்டி அடித்தார்.
சிவகுமாரின் ஆதரவாளர்களோ, 'இவரை மலை போல் நம்பியிருந்தோம்; அந்த நம்பிக்கையை வீணடித்து விட்டாரே...' என, புலம்புகின்றனர்.