PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

'தனக்கு வயதாகி விட்டது என்பதை இப்போது தான் உணர்ந்திருக்கிறார் போலிருக்கிறது...' என, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
நிதீஷ் குமாருக்கு, 73 வயதாகி விட்டது. 'முதல்வர் பதவியை தக்க வைப்பதற்காக அடிக்கடி கூட்டணி மாறுபவர்' என, தேசிய அளவில், இவரது இமேஜும் சரிந்து வருகிறது.
உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீப காலமாக கூறப்படுகிறது. மேடைகளில் மாற்றி மாற்றி பேசி வருகிறார்; அதிகம் நடக்க முடியவில்லை. இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், முதல்வர் நாற்காலியில் வலுக்கட்டாயமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான், சமீபத்தில் நடந்த தன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அதிரடியாக சில முடிவுகளை எடுத்தார். கட்சியின் மூத்த எம்.பி.,யான சஞ்சய்குமார் ஷா, செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்; ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற மணீஷ் வர்மா, கட்சியின் தேசிய பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.இதன் வாயிலாக, தனக்கு அடுத்தபடியாக இவர்கள் இருவரும் தான் கட்சியை வழி நடத்துவர் என்பதை மறைமுகமாக நிதீஷ் உணர்த்தி விட்டார்.
'ஒரு வழியாக இளைய தலைமுறைக்கு வழி விட்டு, ஒதுங்க முடிவு செய்து விட்டார்...'
என, நிதீஷை கிண்டலடிக்கின்றனர், பீஹார் அரசியல்வாதிகள்.

