PUBLISHED ON : ஜன 02, 2024 12:00 AM

'இன்னும் பல அதிரடி மாற்றங்களை, அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம்...' என, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், டில்லியில் உள்ள காங்., நிர்வாகிகள்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முன்னதாக,இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கும்படி, முன்னாள் முதல்வரும், காங்., மாநில தலைவருமான கமல்நாத்தை, காங்., மேலிட தலைவர்கள் வலியுறுத்தினர்.
கமல்நாத், அதை ஏற்க மறுத்தார். விளைவு, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இதனால் ஆவேசமான ராகுல் தரப்பினர், 'ஏற்கனவே கூறியது போல், இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருந்தால், கவுரவமாக இருந்திருக்குமே...
'உங்களுக்கு, 77 வயதாகி விட்டது. மத்திய அமைச்சரிலிருந்து, முதல்வர் வரை பல பதவிகளை வகித்து விட்டீர்கள். இன்னும் ஏன் பிடிவாதம்...' என கேட்க, கமல்நாத்திற்கு கடும் கோபம் வந்து விட்டது.
'நரசிம்மராவ், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்களின் கீழ், மத்திய அமைச்சராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. உங்கள் தந்தை ராஜிவுக்கு அரசியல் ஆலோசனை கூறியவன் நான்...' என, பதிலுக்கு எகிறினார்.
இந்த சம்பவம் நடந்த மறுநாளே, மத்திய பிரதேச மாநில காங்., தலைவர் பதவி, கமல்நாத்திடம் இருந்து பறிக்கப்பட்டது.
இதையடுத்து, 'உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சம் அதிகமாகவே வாயை விட்டுட்டோமோ...' என கவலையில் ஆழ்ந்துள்ளார், கமல்நாத்.

