PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

'உள்ளூரை கடந்து வெளியூரிலும் இவர்களுக்குஇடையேயான மோதல் நீடிப்பது ஆச்சரியமான விஷயம் தான்...' என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்களான காங்கிரசின் அசோக் கெலாட், பா.ஜ.,வின் வசுந்தரா ராஜே சிந்தியா குறித்துபேசுகின்றனர், டில்லி அரசியல்வாதிகள்.
ராஜஸ்தான் அரசியலில்,இவர்கள் இருவருமே பலமான அரசியல்வாதிகள்.இருவரும் மாறி மாறிமுதல்வர்களாக பதவிவகித்துள்ளனர். கடந்தசட்டசபை தேர்தலில் கூட, இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அசோக் கெலாட்டால் முதல்வராக முடியவில்லை.
பா.ஜ., வெற்றி பெற்றதால்,வசுந்தராவுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமுகமான பஜன்லால் சர்மாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதனால் விரக்தி அடைந்த வசுந்தரா, அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் தான், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்படி வசுந்தராவுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த குறிப்பிட்ட சில சமூகத்தினர் ஹரியானாவிலும் அதிகமாக வசிக்கின்றனர். இதற்காகவே, வசுந்தராவை களத்தில் இறக்கி விட்டுள்ளது, பா.ஜ., தலைமை.
இதற்கு பதிலடியாக ஹரியானா மாநிலத்துக்கான கட்சியின் தேர்தல் பார்வையாளராக அசோக் கெலாட்டை நியமித்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
'சபாஷ்; சரியான போட்டி...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

