PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

'இவ்வளவு நாட்களாக மந்தமாக இருந்த அரசியல் களம் இப்போது தான் சூடுபிடித்து உள்ளது...' என, தெலுங்கானா மக்கள் ஆர்வமாக பேசுகின்றனர்.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முந்தைய, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு, கஜானாவை காலி செய்து விட்டு போய் விட்டதாக ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்த நிலையில், ஹைதராபாதில் விரைவில் சர்வதேச அளவிலான அழகிப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சந்திரசேகர ராவின் மகனும், பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவருமான கே.டி.ராமா ராவ், 'ஏற்கனவே மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த லட்சணத்தில் மக்கள் வரிப்பணம், 200 கோடி ரூபாயை அழகிப் போட்டி நடத்துவதற்கு செலவிடலாமா... அந்த நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடலாமே...' என, ஆவேசமாக அறிக்கைவெளியிட்டார்.
இதற்கு பதில் அளித்த ரேவந்த் ரெட்டி, 'அழகிப் போட்டி நடத்துவதற்கு, 54 கோடி ரூபாய் மட்டுமே செலவிடுகிறோம். இந்த போட்டி நடத்துவதால், சர்வதேச நாடுகளின் கவனம் நம் மாநிலத்தின் பக்கம் திரும்பும். கஜானாவை காலி செய்தவர்களுக்கு இதெல்லாம் எங்கு தெரியப் போகிறது...' என, தன் பங்கிற்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா மக்களோ, 'சபாஷ்; சரியான போட்டி...' என, கிண்டல் அடிக்கின்றனர்.

