PUBLISHED ON : நவ 25, 2025 12:00 AM

'நோய், ஒரு மனிதரை இப்படியாக்கி விட்டதே...' என, சிவசேனா - உத்தவ் கட்சி எம்.பி.,யான, 64 வயதாகும் சஞ்சய் ராவத் பற்றி கவலைப்படுகின்றனர், மஹாராஷ்டிரா அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மறைந்த பால் தாக்கரே நிறுவிய சிவசேனா கட்சி, இப்போது இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது.
சிவசேனா என்ற பெயரில் செயல்படும் கட்சிக்கு, ஏக்நாத் ஷிண்டே தலைவராக உள்ளார். தற்போது இவர், ஆளும் கூட்டணியில் துணை முதல்வராக உள்ளார்.
மற்றொரு பிரிவுக்கு, பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே தலைவராக உள்ளார். இந்த கட்சி, சிவசேனா - உத்தவ் என்ற பெயரில் செயல்படுகிறது.
இந்த கட்சியின் தளபதியாக விளங்கியவர் தான் சஞ்சய் ராவத்; மிகச்சிறந்த பேச்சாளர். கட்சி இரண்டாக பிரிந்தபோது, பதவிக்கு ஆசைப்படாமல், உத்தவ் தாக்கரே பக்கம் நின்றார். கடந்த சில மாதங்களாக சஞ்சய் ராவத்தை பார்க்கவே முடியவில்லை; உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சமீபத்தில், பால் தாக்கரேயின் நினைவு தினத்தன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சிக்கு சஞ்சய் வந்திருந்தார். உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியவில்லை; சிலர், அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர்.
அவரைப் பார்த்தவர்கள், 'எப்படியிருந்த மனிதர், இப்படியாகி விட்டாரே...' என, கண்ணீர் வடித்தனர்.

