PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

'ஒரு காலத்தில் எவ்வளவு பரபரப்பாக இருந்தவர்; இப்போது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாரே...' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக இருந்தபோது மக்களை சந்திப்பது, அவர்களிடம் குறைகள் கேட்பது, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது என, பரபரப்பாக செயல்பட்டு வந்தார்.
டில்லியின் அண்டை மாநிலமான பஞ்சாபிலும் அவரது கட்சி ஆட்சி அமைத்ததும், மேலும் பரபரப்பானார். 'தேசிய அளவில் எங்கள் தலைவரின் செல்வாக்கு அதிகரித்து விட்டது. நாட்டின் மற்ற மாநிலங்களிலும் எங்கள் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது...' என, ஆம் ஆத்மி கட்சியினர் பெருமையுடன் பேசினர்.
ஆனால், டில்லியில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்து, 15 ஆண்டு கால ஆட்சியை பா.ஜ.,விடம் பறிகொடுத்தது.
இதனால், உச்சத்தில் இருந்த கெஜ்ரிவாலின் செல்வாக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. அவரது நடமாட்டமும் குறைந்து விட்டது. கட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகம் பங்கேற்பது இல்லை.
டில்லியில் நடந்த மதுபான முறைகேடு வழக்கிலும் அவருக்கு எதிரான அமலாக்கத்துறை, சி.பி.ஐ., பிடி இறுகி வருகிறது. எந்த நேரத்திலும் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்படும் நிலையும் உள்ளது.
இதையடுத்து, 'ஆம் ஆத்மியின் எதிர்காலம் என்னாகுமோ...' என, அந்த கட்சி நிர்வாகிகள் கவலையில் உள்ளனர்.