PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

'என் நிம்மதியை கெடுப்பதற்காகவே இப்படி கிளம்பி வருகின்றனர்...' என புலம்புகிறார், கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா.
கர்நாடக காங்கிரசில் சமீப காலமாகவே முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் பதவி எப்போது பறிபோகுமோ என்ற பீதியிலேயே இருக்கிறார், சித்தராமையா.
இந்நிலையில் தான், ஏற்கனவே காங்கிரசில் இருந்தவரும், சமீபத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டவருமான இப்ராஹிம், அரசியல் அணுகுண்டை துாக்கி சித்தராமையா மீது வீசியுள்ளார்.
அவர் கூறுகையில், '2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் சித்தராமையா களமிறங்கினார். அவர் தோற்கும் சூழ்நிலையில் இருந்தார். அப்போது நானும், மற்றும் சிலரும் சேர்ந்து, 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்.
'இந்த தேர்தலில், 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் சித்தராமையா வெற்றி பெற்றார். நாங்கள் இல்லாவிட்டால், அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது...' என்றார்.
இப்ராஹிமின் இந்த பேச்சு, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையாவிடம் இது குறித்து கேட்டபோது, 'என் மீது குற்றச்சாட்டு கூறும் நபர், இப்போது காங்கிரசில் இல்லை...' என, பதில் அளித்தார்.
பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, 'இப்ராஹிம் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஓட்டுகள் விலைக்கு வாங்கப்பட்டதா என்ற கேள்விக்கு, சித்தராமையாவின் பதில் என்ன...?' என, கொந்தளிக்கின்றனர்.

