PUBLISHED ON : டிச 30, 2024 12:00 AM

'கட்சியில் இருக்கும் எல்லா நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்காமல், தனக்கு பிடித்த ஒரு சிலரை மட்டும் அழைத்து பேசினால் இப்படித் தான் நடக்கும்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் செயல்பாடு குறித்து எரிச்சலுடன் பேசுகின்றனர், கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
சமீபத்தில் நடந்த ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்பது தான், அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்தது. ராகுலும், இந்த இரண்டு மாநிலங்களிலும் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என, மலை போல நம்பியிருந்தார்.
ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து விட்டது. அதிலும், மஹாராஷ்டிராவில் மிக மோசமான தோல்வி கிடைத்தது. இதனால், ராகுல் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார். 'உண்மையான கள நிலவரத்தை யாரும் அவருக்கு சொல்லவில்லை...' என்கின்றனர், அவரது தீவிர விசுவாசிகள்.
கட்சியின் மூத்த தலைவர்களோ, 'தேர்தல் வியூகம் குறித்து, எங்களின் கருத்துக்களை ராகுல் கேட்கவில்லை. சந்திக்க நேரம் கேட்டால் கூட கொடுக்கவில்லை. தேர்தல் நடக்கும் மாநிலங்களை சேர்ந்த தலைவர்களின் கருத்துக்களையாவது அவர் கேட்டிருக்க வேண்டும்.
'அவருக்கு மிகவும் பிடித்த, கேரளாவை சேர்ந்த, கே.சி.வேணுகோபால் போன்ற ஒரு சிலரது ஆலோசனை படியே செயல்பட்டார். தோல்வி ஏற்பட்டதும், இப்போது புலம்பி என்ன பயன்...' என்கின்றனர்.

