PUBLISHED ON : ஜன 08, 2026 03:41 AM

'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இதுபோல இன்னும் பல பரபரப்புகள் அரங்கேறும்...' என, நகைச்சுவையாக பேசுகின்றனர், கேரள மக்கள்.
இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரலில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன்பாக உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள், பராமரிப்பு பணிக்காக, 2019ல் கழற்றப்பட்டன. மீண்டும் அவற்றை கோவிலில் ஒப்படைத்த போது, தங்கக் கவசங்களில் இருந்து, கணிசமான அளவுக்கு தங்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் உறுப்பினராக இருந்த, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை, சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில், 'அய்யப்பா, அய்யப்பா... உன் தங்கத்தை திருடியது யாரப்பா...' என்ற பாடலை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
பா.ஜ.,வினரோ, 'சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக ஹிந்து மதத்தினர் மீது அவதுாறு பரப்பிய காங்கிரசார், இப்போது அய்யப்பன் வழிபாட்டு பாடலை பாடத் துவங்கியிருப்பது, ஆச்சரியமான விஷயம் தான்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
முதல்வர் பினராயி விஜயனோ, 'சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், இது என்ன புது தலைவலி...' என, முணுமுணுக்கிறார்.

