PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM

'இப்படி நடக்கும் என கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை...' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
இவர், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர், மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன். தந்தை மறைவுக்குப் பின் அரசியலில் குதித்தார், ஜெகன். இவரது சகோதரி ஷர்மிளாவுக்கும் அரசியல் ஆசை ஏற்பட்டது.
ஜெகன்மோகன் ரெட்டி அதை விரும்பவில்லை; இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தெலுங்கானாவுக்கு இடம் பெயர்ந்த ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா என்ற கட்சியை துவக்கினார்.
சமீபத்தில் அவர், தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். இதையடுத்து அவர், தெலுங்கானா மாநில காங்., தலைவராக நியமிக்கப்படுவார் என, பேச்சு அடிபட்டது. ஜெகனும், 'நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி...' என,நிம்மதி பெருமூச்சு விட்டார்.
ஆனால், ஜெகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில், ஷர்மிளாவை ஆந்திர மாநில காங்., தலைவராக நியமித்துள்ளது, கட்சி மேலிடம்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெகன், அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தந்தை ராஜசேகர ரெட்டியின் ஓட்டு வங்கிக்கு பங்கு போட, தன் சகோதரியும் களத்தில் குதித்துள்ளதால், என்ன செய்வது என தெரியாமல் உள்ளார்.
காங்கிரஸ் மேலிட தலைவர்களோ, 'முள்ளை முள்ளால் எடுப்பது தான் சரியான அரசியல்; இப்போது ஜெகன் என்ன செய்வார் என பார்ப்போம்...' என, சிரிக்கின்றனர்.

