PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

'எந்த ஒரு எம்.பி.,க்கும் இப்படி ஒரு தர்மசங்கடமான சூழல் வரக்கூடாது...' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பற்றி பரிதாபப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
சமீபகாலமாக, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூரின் அரசியல் நடவடிக்கையில் தடுமாற்றம் தென்படுகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக அவர் பேசியது, காங்., கட்சியினர் காதுகளில் புகையை வர வைத்தது.
இதனால், சசி தரூரை, 'துரோகி' என காங்., கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
சமீபத்தில், முன்னாள் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, மறைந்த இந்திராவின் அவசரநிலை நடவடிக்கையை விமர்சித்து சசி தரூர் பேசியிருந்தார். இதனால், காங்., கட்சியினர், அவர் மீது கொந்தளிப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் தான், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. இதில் சசி தரூர், காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கான வரிசையில் தான் அமர வேண்டும். அப்போது, அவர் மத்திய அரசை பாராட்டி பேசினால், சக காங்., - எம்.பி.,க்கள், அவரிடம் எப்படி நடந்து கொள்வர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
'சசி தரூர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

