PUBLISHED ON : ஜூலை 13, 2025 12:00 AM

'இவர்களது பஞ்சாயத்துக்கு முடிவே கிடையாது போலிருக்கிறது...' என, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூன்று அணியினர் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், மஹாராஷ்டிர மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மூத்த அரசியல்வாதியான, மறைந்த பால் தாக்கரே நிறுவிய சிவசேனா கட்சி, இப்போது மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது.
அதிகாரப்பூர்வமான சிவசேனா, மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படுகிறது. பால் தாக்கரே மகனான உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா - உத்தவ் பிரிவு என்ற கட்சி இயங்குகிறது. உத்தவின் உறவினரான ராஜ் தாக்கரே தலைமையில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சி செயல்படுகிறது.
இந்த மூன்று அணிகளில், உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும், மராத்தி மொழியை பாதுகாக்கும் விஷயத்தில் இணைந்து செயல்படப் போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இவர்கள், மொழி பிரச்னையை கையில் எடுத்துள்ள அதே நேரத்தில், ஏக்நாத் ஷிண்டே, இன விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
'மஹாராஷ்டிராவின் கலாசாரத்தை தென் மாநிலத்தவர்கள் சீர்குலைத்து விட்டனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது...' என, ஏக்நாத் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் சமீபத்தில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிர மக்களோ, 'இந்த மூன்று அணியினரும், தங்களில் யார் பெரியவர் என்பதை காட்டுவதற்காக, எங்களை பலியாடுகளாக ஆக்குகின்றனர்...' என, புலம்புகின்றனர்.