PUBLISHED ON : மே 03, 2025 12:00 AM

'தலைமையில் இருப்பவர்களை விட்டுவிட்டு, அடிமட்டத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்ன பயன்...' என புலம்புகின்றனர், குஜராத் மாநில காங்., நிர்வாகிகள்.
இங்கு, முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜ.,தான் ஆளுங்கட்சியாக உள்ளது.
குஜராத்தில், எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் கடும் முயற்சிகளுக்கு தொடர்ந்து தோல்விதான் பரிசாகக் கிடைக்கிறது.
சமீபத்தில் குஜராத்துக்குச் சென்ற ராகுல், இதுகுறித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். 'இங்கு முக்கியமான பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் மறைமுகமாக பா.ஜ.,வுக்கு வேலை பார்ப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்களை களை எடுக்க முடிவு செய்துள்ளேன்...' என, ஆவேசமாக தெரிவித்தார்.
ராகுலின் உத்தரவுப்படி, துரோக பட்டியலில்இருக்கும் பெயர்களை காங்கிரஸ் மாநில தலைமை தயார் செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர், கிளை மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள். மாநில அளவிலான பதவிகளில் இருக்கும் ஒருவரது பெயர்கூட இந்த பட்டியலில் இல்லை.
இதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் விசுவாசிகள்,'இந்த பட்டியலை தயார் செய்தவர்களில் பலரும், பா.ஜ.,வுக்கு வேலை பார்ப்பவர்கள்தான். இவர்கள் கட்சியில் இருக்கும்வரை, குஜராத்தில் நாம் ஆட்சியை பிடிக்கவே முடியாது...' எனக்குமுறுகின்றனர்.