PUBLISHED ON : டிச 13, 2024 12:00 AM

'கராத்தே போட்டிக்கு போக வேண்டியவர், எப்படி துணை முதல்வரானார் என தெரியவில்லை...' என, உத்தர பிரதேச துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரஜேஸ் பதக் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அங்குள்ள அதிகாரிகள்.
உ.பி.,யில், முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக உள்ள பிரஜேஸ் பதக், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
சமீபத்தில், சந்தவுலிமாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குஆய்வுக்கு சென்றார். அப்போது, புதிய கட்டடம் கட்டுவதற்காகஅங்கு செங்கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
பிரஜேஸ் பதக் அதில் ஒரு செங்கல்லை எடுத்து, 'இது, மிகவும் தரம் குறைந்த செங்கல்; இதில் கட்டடம் கட்டினால் ஆபத்து. இதை எதற்காக வாங்கினீர்கள்?' என, அதிகாரிகளை பார்த்து சத்தம் போட்டார்.
அதிகாரிகளோ, 'இல்லை சார்; இது தரமான செங்கல் தான்...' என, சமாதானப்படுத்தினர்.கடுப்பான பிரஜேஸ் பதக், 'அப்படியா...' என்றபடியே, ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து, கையாலேயே உடைத்து போட்டார்.
பதறிய அதிகாரிகள், 'சாரி சார்; இது தரம் குறைந்த செங்கல் தான்; திருப்பி அனுப்பி விடுகிறோம்...' என, கெஞ்சினர்.
'என்னையா ஏமாற்ற பார்க்கிறீர்கள்; தொலைத்து விடுவேன்...' என கூறியபடியே இடத்தை காலி செய்தார், பிரஜேஸ் பதக்.

