PUBLISHED ON : ஜன 17, 2026 04:26 AM

'இந்த முறை வெற்றி பெறாவிட்டால், அசாமில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும்...' என, முணுமுணுக்கத் துவங்கியுள்ளனர், அந்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்.
அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த, 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்கு முன், இங்கு காங்கிரஸ் தான் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியாக இருந்தது.
அந்த கட்சியின் மூத்த தலைவரான, மறைந்த தருண் கோகோய், தொடர்ச்சியாக, மூன்று முறை சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, முதல்வராக பதவி வகித்தார். அவரது மறைவுக்குப் பின், காங்கிரசின் செல்வாக்கு மங்கத் துவங்கியது.
இந்த பரபரப்பான சூழலில், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அசாமில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, பா.ஜ., முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளது.
காங்கிரசும், இழந்த செல்வாக்கை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, காங்கிரசிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளுக்கு சென்ற தலைவர்களை, மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை அக்கட்சி துவக்கியுள்ளது. இதற்கான பொறுப்பு, தருண் கோகோயின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான கவுரவ் கோகோய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
'கவுரவ் கோகோயின் வலையில் சிக்கப் போகும் தலைவர்கள் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...' என்கின்றனர், அசாம் மாநில காங்கிரசார்.

