PUBLISHED ON : ஆக 11, 2025 12:00 AM

'எப்படியிருந்தாலும், இந்த மூன்று பேரில் ஒருவர் தான், பா.ஜ., தேசிய தலைவராகப் போகிறார்...' என, 'பொடி' வைத்து பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
தற்போது பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக் காலம், 2023ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. அதற்கு பின் லோக்சபா தேர்தல் வந்ததால், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகிப்பதால், இதற்கு மேலும் நட்டா, கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வாய்ப்பு இல்லை.
அடுத்த சில வாரங்களில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவிக்காக பல மூத்த நிர்வாகிகள் முட்டி மோதும் நிலையில், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது, பா.ஜ.,வினரிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். ஒடிசாவில், பா.ஜ., ஆட்சி அமைவதற்கு இவரது உழைப்பு முக்கிய காரணமாக இருந்தது. இதனால், இவர் தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக டில்லியில் பேச்சு அடிபடுகிறது.
அடுத்ததாக, மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், பூபேந்திர யாதவ் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக, பா.ஜ.,வுக்குள் தகவல் கசிந்துள்ளது. ஆனாலும், தர்மேந்திர பிரதானுக்கே அதிக வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.